கொழும்பு – பதுளை ரயில் சேவை இடைநிறுத்தம்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஒஹிய – இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கிடையிலான பாதையில் இன்று புதன் கிழமை பாரிய கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் இந்த புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஒஹிய, இதல்கஸ்ஹின்ன நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், அதனை தொடர்ந்து கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலான ரயில் இலக்கம் 1005 என்ற புகையிரதம் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த 1596 என்ற சரக்கு புகையிரதம் தற்போது இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புகையிரத பாதையில் விழுந்த கற்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.