
கைபேசி பாவிக்க வேண்டாம் என கூறியதால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சிறுவன்
-திருகோணமலை நிருபர்-
கையடக்க தொலைபேசி பாவிக்க வேண்டாம், புத்தகத்தை எடுத்து படி என தாய் கூறியதினால் 15 வயது சிறுவன் மாத்திரைகளை உட்கொண்ட சம்பவமொன்று திருகோணமலையில் பதிவாகியுள்ளது.
திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்யாணபுர பகுதியில் இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவன் தொடர்ச்சியாக கையடக்க தொலைபேசியை பாவித்து வருவதாகவும். படிக்கின்ற நேரத்தில் படிக்குமாறு தாயார் கூறி தனது 15 வயது மகனை தாக்கியதாகவும் இதனையடுத்து மகன் வீட்டிலிருந்த மாத்திரைகளை உட்கொண்டதாகவும் தாயார் குறிப்பிட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான மகன் தனி அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், பகல் சாப்பாட்டிற்காக சிறுவனை பார்த்த போது வீட்டுக்குள் மயங்கிய நிலையில் இருந்ததாகவும், இதனை அடுத்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தாய் கூறினார்.
இதனை அடுத்து மயக்க முற்ற நிலையில் இருந்த சிறுவனை மேலதிக சிகிச்சைக்காக பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் கையடக்க தொலைபேசி பாவனை தொடர்பினால் சிறுவர்கள் அதிக அளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளதாக திருகோணமலையில் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.