
குடி நீர் விநியோகம் ஒழுங்கின்மையால் பொது மக்கள் சிரமம்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் வழங்கப்படுகின்ற குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படுவதில்லை, என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக நீர்த் தேவையுள்ள பூநகரி பிரதேசத்தில் பொது மக்கள் நீர் வழங்கல் சபையின் நீரினை முழுமையாக நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களால் விநியோகிப்படுகின்ற குடி நீரானது நாளாந்தம் சீராக வழங்கப்படுதில்லை எனவும், சில நாட்களில் நீர் விநியோகம் இன்றி காணப்படுவதோடு, பல நாட்கள் போதியளவு நீர் குழாய்கள் மூலம்
கிடைப்பதில்லை குழாய்களை திறக்கின்ற சந்தர்ப்பங்களில் நீர் மிக மிக குறைந்த அளவில் நீர் கிடைப்பதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் மலையாளபுரம், விவேகானந்தநகர், பரந்தன், உமையாள்புரம் பகுதிகளில் பொது மக்களால் குடிநீரை சீராக பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, முழுமையாக இந் நீரையே நம்பியுள்ள எமக்கு சீரான குடி நீர் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு வினவிய போது
தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள மின்சார துண்டிப்பு காரணமாக நாள் ஒன்றுக்கு தேவையான நீரை கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரித்து வழங்க முடியாதுள்ளது.
எனவே, ஏனைய மாவட்டங்களில் உள்ளது போன்று நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மாத்திரம் தடையின்றிய மின்சார விநியோகம் வழங்கப்படுகின்ற போது நாமும் பொது மக்களுக்கு சீரான முறையில் தேவையான அளவு நீரை வழங்க முடியும்.
ஆகவே, இது தொடர்பான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.