கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்கப்பட்டமைக்கு அங்கஜன் கண்டனம்

30

தனது உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் வழங்கும் செயற்பாட்டை கவனித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ந.சரவணபவன், கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வைத்து தாக்கப்பட்டுள்ளமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்,

நாம் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்ததனை எவரும் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. கடந்த வருடம் எம் கண்களுக்கு தெய்வத்தை விட மேலாகத் தெரிந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று தாக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

உயிர் காக்கும் உன்னத பணியில் ஈடுபடுபவர்கள் சுகாதாரப் பணியாளர்கள். வெறுமனே எரிபொருளுக்காக அவர்களை எதிர்ப்பது மனசாட்சிக்கு விரோதமான செயற்பாடு.

கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தேன்.

உன்னத பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மனம் நோகும்படியான செயற்பாடுகள் பல இடம்பெறுகின்றன.

பொலிஸ் பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறான வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களில் அடாவடியில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலம் கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மூலமாக பல படிப்பினைகளை எமக்கு ஊட்டியுள்ளது.

நெருக்கடி நிலைமையில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும்.

இனியும் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடாமல் மனிதநேயப் பண்போடு வாழக் கற்றுக்கொள்வோம், என தெரிவித்துள்ளார்.

Sureshkumar
Srinath