-வாழைச்சேனை நிருபர்-
வறிய கர்ப்பிணி தாய்மார்களுக்கும் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் போசனை பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு வந்தாறுமுலை கிராமோதைய சுகாதார சேவைகள் நிலையத்தில் நடைபெற்றது.
குறித்த திட்டத்தினை சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான சமறிட்டன் பேஸ் நிறுவனமும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் இணைந்து மாவட்டம் தோறும் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பத்தாயிரம் ரூபா (10000) பெறுமதியிலான மூவாயிரம் (3000) போசனை பொதிகளே இவ்வாறு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வந்தாறுமூலை, சித்தாண்டி, மாவடிவெம்பு, களுவன்கேணி, பலாச்சோலை ஆகிய கிராமங்களில் உள்ள கற்பினி தாய்மாருக்கு வழங்கப்பட்டது.
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.சிறிநாத் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், உதவிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன், செங்கலடி மேலதிக வைத்திய அதிகாரி ஏ.இ.எவ்.இ ஹஸ்மத் மற்றும் சமறிட்டன் பேஸ் இன்ரநெஷனல் நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி எஸ்.ரமணதாஸ் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தனர்.

