கறுப்புச் சந்தையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு

-கல்முனை நிருபர்-

பெற்றோல் விநியோகத்தில் முறைகேடுகளை இல்லாதொழிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று சாய்ந்தமருது பிரதேச செயலக ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.எம். சம்சுதீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், சாய்ந்தமருது லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலைய நடத்துனர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட செயலியை செயல்படுத்தும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதிலே, நடைமுறைச் சாத்தியமான பல முடிவுகள் நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்டதுடன் முடியுமான அளவு கருப்புச் சந்தையை குறைப்பதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் விநியோக செயற்திட்டம் நடைமுறைக்கு வரும் வரை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி நடைமுறையில் இருக்கும் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் இதன்போது தெரிவித்தார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க