கடைக்குள் புகுந்த மேஜர் ஜெனரலின் கார்

மாவனல்லை ஹிங்குல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றில் மோதியதில் அங்கு பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கார் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாரதியினால்  வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி காய்கறி கடையை மோதி  பலத்த சேதம் விளைவித்ததுடன் அருகிருந்த தொலைபேசி கம்பத்திலும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காரை ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர்  செலுத்திச் சென்றமையும் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மாவனல்லை  ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேதபரிசோதனைகள் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய காரை  செலுத்திச்  சென்றதாகக் கூறப்படும் மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்