
கடந்த ஆண்டு 388 யானைகள் மரணம்
நாட்டில் 2024 ஆம் ஆண்டு காட்டு யானை தாக்குதல்களுக்கு இலக்காகி 155 பேர் உயிரிழந்ததாகவும், யானை – மனித மோதல் காரணமாக 388 யானைகள் உயிரிழந்ததாகவும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு 354 பேர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரையில் உரிய முறையில் கணக்கிடப்படவில்லை.
அதேநேரம், காட்டு யானைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
இதன்படி, மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் காட்டு யானைகள் மக்கள் வாழும் பகுதிக்குள் செல்வதைத் தடுப்பதற்காக விசேட காவலரண்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
பல வேலைத்திட்டங்கள் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், நகரங்களுக்குள் நுழையும் அளவிற்கு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானை கட்டுப்படுத்துவதற்காகக் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இதேவேளை, மீனகயா தொடருந்தில் மோதி காட்டுயானைகள் உயிரிழந்த விபத்து தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்தில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்குத் தவறிய தொடருந்து திணைக்கள அதிகாரிகளின் மீது வனஜீவராசிகள் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சுற்றாடலியலாளர் நயனக ரங்வெல்ல தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மீனகயா தொடருந்தில் நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு மோதி 6 காட்டுயானைகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.