
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் சார்ஜன் கைது
அநுராதபுரத்தில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜனை அநுராதபுரம் பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
அநுராதபுரம் தலைமையக பொலிஸ் வளாகத்திற்குள் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜனை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 170 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 38 வயதுடைய நொச்சியாகம பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் ஆவார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் வளாகத்திலுள்ள மலசல கூடத்திற்குள் போதைப்பொருள் அருந்துவதாக கிடைத்த தகவலுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளமை மேலும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக அநுராதபுரம் நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.