ஏறாவூர் வன்முறைகள் தொடர்பாக தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபர் சரணடைந்தார்

-வவுணதீவு நிருபர்-

மட்டக்களப்பு ஏறாவூரில் கடந்த மே 9ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சந்தேக நபரான அப்துல் மஜீட் பிர்தௌஸ் சரணடைந்ததைத் தொடர்ந்து சந்தேக நபரை செப்ரெம்பெர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிவான் அன்வர் சதாத் உத்தரவிட்டார்.

சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஹபீப் முஹம்மது றிபான், அச்சலா செனவிரெட்ண ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான நஸீர் அஹமட்டின் வாடகைக் காரியாலயம், அவரது உறவினரின் வீடு, ஹோட்டல்களுக்கு தீயிட்டுக் கொளுத்தியமை, கொள்ளையடித்தமை, அத்துடன் 3 ஆடைத்தொழிற்சாலைகளை சேதப்படுத்தியமை தொடர்பாக, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் ஏற்கனவே 38 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில் பிரதான சந்தேக நபர் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172