இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு தெற்கே அமைந்துள்ள கேட்விக் சர்வதேச விமான நிலையத்தில், எயார் அரேபியா விமானத்தின் சக்கரப் பகுதியில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர், கடும் குளிர் மற்றும் குறைந்தளவு ஒட்சிசன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொராக்கோவின் டாங்கியர் நகரிலிருந்து கடந்தஜூன் 16ஆம் திகதி கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில், வழக்கமான சோதனைகளை மேற்கொண்டிருந்த தரைப் பொறியாளர் ஒருவர் குறித்த நபரின் சடலத்தை கண்டுபிடித்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மரணப் பரிசோதனையில், இதயத் துடிப்பு நின்றமை, உடலில் ஒட்சிசன் குறைபாடு (Hypoxia) மற்றும் உடல் வெப்பநிலை ஆபத்தான அளவுக்குக் குறைந்தமை (Hypothermia) ஆகியவை மரணத்திற்கான காரணங்களாகக் கண்டறியப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையை முன்னெடுத்த மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர், விமானத்தின் சக்கரப் பகுதியில் நிலவும் சூழல் மிகவும் குளிராகவும், அங்கு ஒட்சிசன் அளவு குறைவாகவும் இருந்திருக்கக்கூடும் என, நேற்று செவ்வாய்க்கிழமை ஹோர்ஷம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கு சசெக்ஸ், பிரைட்டன் மற்றும் ஹோவ் பகுதிகளுக்கான மரண விசாரணை அதிகாரியான டர்னர், இந்த மரணம் இயற்கைக்கு மாறான மரணம் எனக் கருதுவதற்கான காரணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 16ஆம் திகதி காலை 11.30 மணியளவில் விமானம் கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து அவசர சேவைகள் எயார் அரேபியா விமானத்திற்கு சென்றதாக கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த மரணம் தொடர்பான விசாரணை 2027 பெப்ரவரி 24ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.










