உழவு இயந்திரம் விபத்து : 10 பெண் தொழிலாளர்கள் படுகாயம்

-பதுளை நிருபர்-

உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 10 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பசறை கோணக்கலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 7 மணி அளவில் , குறித்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கடமையாற்றிய பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, காவத்தைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம்,  காவத்தைத் தோட்டத்திற்கு செல்லும் வீதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இதன்போது, காயமடைந்த 10 பெண் தொழிலாளர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 4 தொழிலாளர்கள் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அறுவர் பசறை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, விபத்தில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸின் இணைப்புச் செயலாளர் ஜெயச்சந்திரனும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.