
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி விரைவில்
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் திகதி எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குப் பின்னர் உறுதியாக அறிவிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, அதில் 25 சதவீதமானோர் பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் தங்களது வேட்பாளர்கள் பட்டியல் வட்டாரத்தில் 10 சதவீதமானோரைப் பெண்களாகவும், மேலதிக பட்டியலில் 50 சதவீதம் பெண்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், வேட்புமனுவில் 25 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
எனவே, வேட்புமனு தயாரிப்பின்போது, அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரியுள்ளார்.
தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண சபைகள், கட்சி பொதுச் செயலாளர்கள், ஆணைக்குழு செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.