
இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை!
கிளாடியஸ் தெற்காசியா (Gladius South Asia) என்ற நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்யுமாறு தெரிவித்து, இந்நிறுவனத்திலிருந்து வட்ஸ்அப் மூலமாகவோ அல்லது ஏனைய வழிகளிலோ வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ சந்தைப் பங்கேற்பாளராகச் செயல்பட “கிளாடியஸ் தெற்காசியா” என்ற நிறுவனம் உரிமம் பெறவில்லை என்று இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) அறிவித்துள்ளது.
தமது உத்தியோகபூர்வ தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC), கிளாடியஸ் தெற்காசியா என்ற நிறுவனத்துக்கு வெளிநாட்டு அதிகார வரம்புகளில் செயல்படுவதற்கான உரிமங்களை வழங்க இல்லை என தெரிவித்துள்ளது.
கிளாடியஸ் தெற்காசியா என்ற நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நிதி நடத்தை ஆணைக்குழுவில் (FCA) உரிமம் பெற்றதாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பதாக, இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும், கிளாடியஸ் தெற்காசியா, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நிதி நடத்தை ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் அல்ல என்பதை FCA அதிகாரப்பூர்வமாக இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் உறுதிப்படுத்தியுள்ளது, என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும், நிதி முதலீடுகளின் போது அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

