மட்டு.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்காக மாபெரும் இரத்ததான நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஏறாவூரில் மாபெரும் இரத்ததான சேகரிப்பு முகாம் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு இரத்தம் பெறப்பட்டதாக அவ்வொன்றியத்தின் செயலாளர் எம்.எஸ்.எம். றஸீன் தெரிவித்தார்.

ஏறாவூர் அல்-அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இந்த இரத்ததானம் சேகரிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

மனித நேயப் பணியாக ‘உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம் எனும் இந்த உன்னத கொடையில் பங்கு கொண்டு இரத்தம் தேவைப்படும் நோயாளர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்ததன் பேரில் நூறிற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்கு கொண்டு இரத்ததானம் செய்துள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் எம்.எல். செய்யதஹமது தெரிவித்தார்.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பு வைத்தியர் ஆன் றாச்சல்,  இரத்ததானம் என்பது உன்னதமானதொரு கொடையாகும், இக்கொடைக்கு பெறுமதி என்பது அளவிட முயாதது.

இன மத பேதமில்லாமல் முகம் தெரியாத மற்றொருவரின் உயிர் காக்க, அவரை வாழ வைக்க இந்த குருதிக் கொடை உதவும், என்றார்.

இரத்ததான சேகரிப்பு ஆரம்ப நிகழ்வில், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி.நிஹாறா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பு வைத்தியர் ஆன் றாச்சல் டி சில்வா,   ஏறாவூர் நகர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷாபிறா உள்ளிட்ட அதிகாரிகளும், இரத்த வங்கி தாதியர்களும், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகளும், குருதிக் கொடையாளிகளும் கலந்து கொண்டனர்.