புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனவிலுந்தாவ ராம்சார் சரணாலயத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவலின்படி, கடந்த புதன்கிழமை சரணாலயத்தின் மையியாவ குளம் பிட்டிய பிரதேசத்தில் இந்தத் தீ ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வனவிலங்கு அதிகாரிகளுடன் சிலாபம் பிரதேச செயலகம், சிலாபம் பிரதேச சபை, ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலகம், ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை மற்றும் சிலாபம் தீயணைப்புப் பிரிவினர் இணைந்துள்ளனர்.
தீயை அணைக்கும் பணிகளுக்காக நீர் பவுசர்கள் மற்றும் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மையியாவ மற்றும் போகஹவெட்டிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் அதிகாரிகளுடன் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டதுடன், பேக்ஹோ இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலப்பரப்பும் தயார் செய்யப்பட்டுள்ளது. எனினும், நிலவும் பலத்த காற்று மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு பகுதியிலுள்ள தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், காற்றின் திசையில் தீ தொடர்ந்து பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையும் தீ நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தீ மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக அதிகாரிகளும் பிரதேச மக்களும் இரவு பகலாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆனவிலுந்தாவ ராம்சார் சரணாலயத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.










