ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் 2022-2025 காலப் பகுதியில் 21 விமானங்களை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான கொள்முதல் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், இன்று திங்கட்கிழமை பரிந்துரைத்தார்.
இதற்கமைய தற்பொழுது காணப்படும் பொருளாதார நிலைமையின் கீழ் முழுமையான செயற்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறும், உரிய கொள்முதல் செயல்முறை உரிய நடைமுறைகளுக்கு இணங்குகிறதா என்பது பற்றி ஆராயுமாறும் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
விமானங்களின் சேவைக்காலம் முடிவடைந்ததும் அவற்றுக்காக விமானங்களை மாற்றீடு செய்தல் விமான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அவசியமான நடைமுறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதும் நாட்டின் நெருக்கடி நிலைமை காணப்படுவதால் இது குறித்து அதிக கவனம் செலுத்தி உரிய தேவைகளைப் பூர்த்தி செய்வது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவையில் தற்பொழுது காணப்படும் 24 விமானங்களில் எண்ணிக்கை சில காலங்களில் குறைவடையும் என்றும், விமானங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது. இதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பதால் அதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்து விளம்பரத்தைப் பிரசுரித்திருந்ததாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக பத்திரகே மற்றும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.