வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும்

இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டு வர, உரிய காலத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது காணப்படும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மந்த கதியிலேயே செயற்படுவதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அண்மையில் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் இந்திய கடன் வசதியை உடனடியாக செயற்படுத்துவதாக அவர் உறுதி வழங்கியுள்ளார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்நாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.