விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு

ஹெட்டிபொல, முனமல்தெனிய – கட்டுபொத வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவன் தான் பயணித்த பேருந்தில் இருந்து இறங்கி பேருந்தின் பின்னாலிருந்து வீதியைக் கடக்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது, எதிரே வந்த சிறிய ரக லொறி ஒன்று சிறுவன் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் வலவுவத்தை அனுக்கன்ஹேன பகுதியைச் சேர்ந்தவர் எனவும், மொரகனே மகா வித்தியாலயத்தில் தரம் 06 இல் கல்வி கற்கும் மாணவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்