விபத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு
வவுனியா குருமன்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
வவுனியா – வைரவபுளியங்குளம், ரயில் நிலைய வீதியை சேர்ந்த சந்திரபோஸ் ஸ்ரீகாந்தன் (வயது – 23) என்ற பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி நண்பர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இதில் படுகாயம் அடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.