வினாத்தாள் கசிவு: எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிலக்கச் செய்யுமாறு கோரி மனு தாக்கல்

10

இந்த முறை இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் போது கசிந்ததாக கூறப்படும் மூன்று வினாக்களுக்கான முழுமையான புள்ளிகளை வழங்குவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிலக்கச் செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றில் மேலும் ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில், குறித்த பரீட்சைக்காக தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரிய, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்ட சிலர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின், முதலாம் பகுதி வினாத்தாளில் இருந்து 3 வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்திருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஆகியன விசாரணைகளை முன்னெடுத்திருந்தன. அத்துடன், இந்த விடயம் தொடர்பில் கண்டறியும் வகையில் 7 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் பரிந்துரைக்கமைய, 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டது.

கசிந்ததாக உறுதிசெய்யப்பட்ட 3 வினாக்களுக்குமான புள்ளிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்தநிலையிலேயே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

Sureshkumar
Srinath