யாழ்.அச்சுவேலி மத்திய கல்லூரியில் கணினி உபகரணங்கள் திருட்டு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – அச்சுவேலி மத்திய கல்லூரியில் உள்ள கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட மின் வெட்டினை வாய்ப்பாகப் பயன்படுத்தி பாடசாலையின் கதவு, ஜன்னல் உடைக்கப்பட்டு கணினி உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

பாடசாலையின் கண்காணிப்பு கமரா மின் துண்டிப்பினால் இயங்காதிருந்த நேரம் அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இனந்தெரியாதோர் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த கொவிட் காலத்தின் போதும் பாடசாலையில் தங்கியிருந்து சிலர் அங்குள்ள பொருட்களைச் சூறையாடிச் சென்றனர்.

இருப்பினும் அது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் நேற்று மாலை குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

திருட்டு இடம்பெற்ற பாடசாலையின் வளாகத்தினுள் பொலிஸாரின் மோப்ப நாய் மற்றும் தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோர் தடயங்களைச் சேகரித்தனர்.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.