முச்சக்கர வண்டி சாரதிகளின் நிர்வாகத்தை கலைக்க கோரிக்கை

-மன்னார் நிருபர்-

மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் பல வழிகளில் நிர்வாக செயல் பாடுகளை தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளதோடு, மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிய நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு கோரி குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் எழுத்து மூலம் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் பல வழிகளில் நிர்வாக செயல்பாடுகளை தவறான முறையில் பயன்படுத்தி வருவதால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதோடு, சங்கத்தின் செயல் பாடுகளால் உறுப்பினர்கள் விரக்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரையில், மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பொதுக்கூட்டம் கூட்டப்படவில்லை, கணக்கறிக்கைகள் தற்போதைய நிர்வாகம் ஆரம்பித்த காலம் தொட்டு விளம்பரப் பலகையில் காட்டப்படாமை, பல வருட காலமாக சேவையில் ஈடுபடாத முச்சக்கர வண்டி தரிப்பிடத்தை புதிய நபர்களுக்கு தரிப்பிட மாற்றத்தை செய்து கொடுத்தமை, மாத சந்தா பணம் அறவிடப்படாமை, சங்க உறுப்பினர்கள் நலன்களை, கருத்துக்களையோ செவி சாய்க்காமல் தங்களின் செயற்பாடுகளில் திணிக்கின்றமை, பயணிகளிடம் அறவிடப்படும் பணம் சங்கத்தால் தீர்மானிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக குறித்த சங்க உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் எமது ஆதங்கங்களை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்,  தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிய நிர்வாகத்தை ஏற்படுத்தி அந்த புதிய நிர்வாகத்திற்கு புதிய தரிப்படங்களை வழங்கக் கூடாது என்ற கட்டளையை பிறப்பித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் தலைமை பொலிஸ் பொறுப்பு அதிகாரி, வட மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மனித உரிமைகள் ஆணைக்குழு, பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.