மின்வெட்டுக்கான காரணத்தை அறிவித்தார் பவித்ரா

நாட்டில் மின்சாரத்துக்கான கேள்வி அதிகரித்து உற்பத்தி குறைவடைந்துள்ளமையே மின் துண்டிப்புக்கான பிரதான காரணமென மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

தற்போதைய நீண்டநேர மின் துண்டிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 02 ஆம் திகதி தேவையான டீசல் கிடைக்கவுள்ளதாகவும் அதனையடுத்து தற்போதைய மின் துண்டிப்பு நடவடிக்கைகளில் சில மணித்தியாலங்களை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் .

போதியளவு எரிபொருள் கிடைத்தவுடன் மின் துண்டிப்பின் நேரத்தை கணிசமானளவு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரத்துக்கான கேள்வி வெகுவாக அதிகரித்துள்ளதுடன் பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பாவித்து தற்போதைய நெருக்கடி நிலையில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

நீர் மின் உற்பத்திக்காக நீரைப் பெற்றுக்கொள்ளும் கொத்மலை, காசல்ரீ, மவுசாகலை, ரந்தெனிகல, சமனலவெவ போன்ற நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. அத்துடன் சில நீர்த்தேக்கங்களிலிருந்து விவசாயத்துக்கான நீர் பெறப்படுவதால் அவற்றின் மூலம் மின் உற்பத்திக்கான நீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் காணப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு நாட்டில் போதியளவு மழைவீழ்ச்சியிருந்தும் எத்தகைய சிக்கலும் இல்லாத நிலையில் நான்கு மணித்தியால மின்துண்டிப்பு நாட்டில் இடம்பெற்றது. தற்போது கொள்ளளவு குறைவு மற்றும் நீர் மின் உற்பத்தியின் வீழ்ச்சி காரணமாகவும் பல மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்