பொருளாதாரச் சவால்கள், பிராந்திய பாதுகாப்பு குறித்து டில்லியில் அநுராவுடன் பேச்சு

 

-கொழம்பு-

இந்திய அரஙாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று புதுடில்லி சென்றிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

கலாநிதி ஜெய்சங்கருடனான பேச்சுவார்த்தை வெளியுறவு அமைச்சில் திங்கட்கிழமை காலையிலும் அஜித் டோவாலுடனான பேச்சுவார்த்தை சர்தார் பட்டேல் பவானில் மாலையும் நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் அறிவித்தன.

ஜெய்சங்கருடனான பேச்சுவார்த்தையில் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் குறித்தும் அதன் எதிர்கால அரசியல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்களை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையின் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யின் தலைருடனான சந்திப்பு மகிழ்ச்சி தருவதாகவும் அவருடன் இரு தரப்பு உறவுகள் பரஸ்பர நலன்களை பலப்படுத்துதல் குறித்து விரிவாக ஆராய்ந்ததாகவும் ஜெய்சங்கர் ‘எக்ஸ் ‘ வலைத்தளத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

‘அநூரா குமார திசாநாயக்கவை சந்தித்துப் பேசியது மகிழ்ச்சி தருகிறது.இரு தரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்களை ஆழப்படுத்துவதற்கான வழிவகைகள், இலங்கையின் பொருளாதாரச் சவால்கள் மற்றும் முன்னேறிச் செல்வதற்கான மார்க்கம் குறித்து ஆராய்தோம் ‘ என்று ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

அஜித் டோவாலுடனான பேச்சுக்களில் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்து ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐந்து நாள் இந்திய விஜயத்தின்போது திசாநாயக்கவும் அவரது குழுவினரும் அஹமதாபாத், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும் செல்வார்கள்.

ஜே.வி.பி.யின் தலைவர் ஒருவர் இந்திய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக டில்லிக்கு அழைக்கப்பட்டது இதுவே முதறதடவை. இலங்கையில் இவ்வருடம் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், தென்னிலங்கையில் மக்கள் மத்தியில் திசாநாயக்கவினதும் அவரது கட்சியினதும் செல்வாக்கு பெருமளவுக்கு அதிகரித்துவருவதாகக் கூறப்படும் நிலையில் புதுடில்லிக்கு அவர் அழைக்கப்பட்டு பேசசுவார்த்தைகள் நடத்தப்படுவது முக்கியம் வாய்ந்த ஒரு மாற்றமாகும் என ‘த இந்து ‘ பத்திரிகை கூறுகிறது.