
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சஜித் வலியுறுத்தல்!
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எமது நாட்டின் வைத்தியசாலை வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக நாங்கள் அண்மைக்காலம் வரை கேள்விப்பட்டதில்லை. அநுராதபுரம் போதனாவை வைத்தியசாலை அதிகளவான மக்கள் நடமாடும் இடம். நாட்டில் இருக்கும் பெரிய வைத்தியசாலை. கடமையில் இருக்கும்போதே குறித்த வைத்தியர் இந்த சம்பவத்துக்கு ஆளாகி இருப்பது பாரிய பிரச்சினையாகும்.
இந்த சம்பவத்தின் மூலம் நாட்டில் வைத்தியசாலை வளாகத்தில் பெண் வைத்தியர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை எழுகின்றது. அநுராதபுரம் வைத்தியசாலையில் இருக்கும் பாதுகாப்பு கூட இல்லாத நூற்றுக்கணக்கான வைத்தியசாலைகள் எமது நாட்டில் இருக்கின்றன. இவ்வாறான சம்பவத்தினால் எமது நாட்டு பெண் வைத்தியர்கள் பெரும் அச்சத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர். கடந்த காலங்களில் வைத்தியர்களுக்கு எதிராக தூண்டிவிடும் ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்ட வகையில் இடம்பெற்றன. கோபமூட்டும் சம்வங்கள் இடம்பெற்றன. இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் கதைக்கும்போது அது தொடர்பில் நகைச்சுவை செய்கிறார்கள். கேலிச்சித்திரமும் வரைந்திருந்தார்கள். ஆனால் தற்போது அரச சேவையில் மாத்திரமல்லாது, சேவையில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு தங்களின் கடமையைகூட மேற்கொள்ள முடியாத கஷ்டமான நிலைக்கு ஆளாகி இருப்பதன் மூலம் உண்மையிலே மக்களின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் பெண் வைத்தியர் ஒருவர் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகி இருப்பதை அரசாங்கத்துக்கு தெரியுமா? அப்படியானால் எப்போது தெரிந்து கொண்டது ? அது தொடர்பில் எடுக்கப்போகும் நடவடிக்கை யாது?
தொழில்துறைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சர்ஙதேச மகளிர் தினத்தில் இந்த சபையிலும் வெளியிலும் நாங்கள் கதைத்து நிகழ்வுகளை மேற்கொண்ட நிலையில், இவ்வாறான சம்பவத்தினால் பெண்கள் நிர்க்கதியானதொரு நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் அனைவருக்கும் பாரிய உணர்வு இருக்கிறது. ஆனால் உணர்வுகள் மாத்திரம் இருந்து போதாது. இந்த நாட்டில் வைத்தியர்கள் உள்ளிட்ட பெண்களை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடமை நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம். அதனால் இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எடுக்க இருக்கும் நடவடிக்கை என்ன என்பதுடன் வைத்தியசாலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் கடமை புரியும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ற ? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.