புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு?
புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம்.
கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து, வராமல் போயிருந்தால் அவர்களை இலங்கை வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.
அவர்களின் பாதுகாப்பை எமது அரசாங்கம் உறுதி செய்யும்.
இவ்வாறு நேற்றுத் தமிழன் பத்திரிகையிடம் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட நிதியமொன்று உருவாக்கம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டமை பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,
புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இந்த நிதியம் உருவாக்கப்படுதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனையொன்றை முன்வைத்துள்ளது.
இதனைப் பற்றி தொடரந்து பேசி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும்.
புலம்பெயா் தமிழர்கள் எமது நாட்டில் பிறந்தவர்களே. அவர்களுக்கு இந்த நாட்டில் எதனையும் மேற்கொள்ள உரிமையுண்டு.
அவர்கள் இங்கு வருறவதற்கோ அல்லது இங்கு வந்து முதலீடுகளை செயவதற்கோ அச்சப்பட தேவையில்லை.
அவர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும். அதனை உறுதி செய்யும்.
இதுதொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்மிடம் முன்வைக்கலாம்.
அவற்றை கவனிக்க அரசு தயாராக இருக்கிறது.
அதன் மூலம் புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை தருவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை அரசாங்கம் உருவாக்கும் என்றாா் ஜனாதிபதி கோட்டாபய.