பிரித்தானியா உள்ளிட்ட மூன்று நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு

நாட்டின் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று வியாழக்கிழமை  முற்பகல் சந்தித்தனர்.

பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லார்ட் மைக்கல் நெஸ்பி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த போது, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தமது மகிழ்ச்சியை வௌிப்படுத்தியுள்ளார்.

சூரியசக்தி உள்ளிட்ட ஏனைய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களூடாக மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கு பிரித்தானியா ஒத்திழைப்பு வழங்க தயார் என பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லார்ட் மைக்கல் நெஸ்பி கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பணியாளர்களுக்கு அதிகளவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தென் கொரியாவின் அரசாங்க கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் Koo Yun-cheol ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

சுற்றுலா வலயங்களை மேம்படுத்துவது குறித்து தமது அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்தியுள்ளதாக எகிப்து தூதுவர் தெரிவித்துள்ளார்.