பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு வலி யுறுத்தும் பிரேரணையை முன்வைக்க தயாராகி வருகின்றோம் – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை இரண்டரை வரு டங்களுக்கு பிறகே ஜனாதிபதியாலகலைக்க முடியும். எனினும், பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டால் நாளை வேண்டுமானாலும் அதனை கலைக்க முடியும்.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மீள்வதற்கான வேலைத் திட்டத்தை அரசு முன்வைக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியனவும் தீர்வு திட்டத்தை சமர்ப்பிக்க வில்லை. முழு நாடும் சரியான பாதைக்கு எனும் வேலைத்திட்டத்தை நாமே முன் வைத்துள்ளோம். சரி, எதிரணிகளை விடுவோம், தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண்டியது அரசின் கடப்பாடாகும். அதனை செய்யாவிட்டால் அரசு பெயில் என்றே புலப்படும்.

நாட்டு மக்களை சாகடிக்கும் இந்த அரசுக்கு ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்க அனுமதி வழங்குவதா அல்லது பாராளுமன்றத் தேர்தலுக்கு சென்று நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கக் கூடிய தரப்புக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கே இருக்கின்றது.

அதேவேளை, இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றம் வருவதை தடை செய்வதற்கான அரசமைப்பு திருத்தத்தை நான் அடுத்த மாதம் முன்வைப்பேன். தனிநபர் சட்டமூலமாக இது முன்வைக்கப்படும். இரட்டை குடியுரிமை உடையவர்கள் நீதிபதிகள், தூதுவர்கள் மற்றும் அரச நிர்வாக சேவையில் உயர் பதவிகளை வகிப்பதற்கு தடை செய்யுமாறு இதன் மூலம் கோரப்படும் என்றார்.