பாடசாலையில் போதைப்பொருள் பாவனை

-யாழ் நிருபர்-

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முல்லைத்தீவில் உள்ள  பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 10 மற்றும் 11ல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாடசாலையில் வைத்து போதை பொருள் நுகர்வது கண்டறியப்பட்டுள்ளது .

குறித்த மாணவர்கள் புகைத்தல் பொருட்கள் பாதுகாப்பாக அடைத்துவரும் வெள்ளை மற்றும் மஞ்சள் கலந்த தாளில் ஒருவகையான தூள் கலந்த பொருளினை சூடேற்றி அதிலிருந்து வெளிவரும் புகையினை மணக்கும் செயற்பாடு தொடர்ச்சியாக குறித்த பாடசாலையில் இடம்பெற்று வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரிந்த நிலையிலும் அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருவதாக அறியக் கிடைத்துள்ளது.

குறித்த பாடசாலையில் பெண் மாணவிகளும் கல்வி கற்கின்ற நிலையில் ஒரு சில ஆண் மாணவர்களின் செயற்பாடுகளால் ஏனைய மாணவர்களுக்கும் அசொகரியத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 20 மேற்பட்ட மாணவர்கள் தமது கைகளை பிளேட்டினால் வெட்டிய பின்னணியில் போதைப் பொருள் பாவனையே இருப்பதாக குற்றச்சாட்டுள் எழுந்தன.

அகவே எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி குறித்த பாடசாலையில் இடம்பெறும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் தலையீடு செய்வது காலத்தின் தேவையாகும்.

குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு வலையகம் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்ட போது குறித்த விடயம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.