பாடசாலைகள் ஸ்தம்பிதம் : தபால் சேவை முடக்கம்!

-அம்பாறை நிருபர்-

இலங்கையின் பல்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை  முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கல்முனை பிரதேச பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வரவின்மையால் பாடசாலைகள் நடைபெறவில்லை.

இதே வேளை, கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகம் மூடப்பட்ட நிலையில் தபால் சேவையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

அதிபர், ஆசிரியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாட்டுத்தீர்வினை வழங்கும்படி வலியுறுத்தி, அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், ஏனைய துறைசார்ந்த தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இவ்வேலை நிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்