பளையில் சட்டவிரோத மண் அகழ்வோருக்கு பொது அமைப்புக்கள் விடுத்துள்ள வேண்டுகோள்

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பிரதேசத்தில் பல வருடங்களாகவே சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பாக பல்வேறு பொது மக்களால் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன, இருப்பினும் எந்த பயனும் இல்லாது தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வோரால் மண் திருட்டு இடம்பெற்று கொண்டு தான் இருக்கின்றது.

சட்டவிரோத மண் அகழ்வினால் சில பாடசாலை மாணவர்கள் கல்வி நிலைகளை இடைநிறுத்தி சட்ட விரோத மண் அகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர்கள் மதுபோதைகளுக்கு அடிமையாகி தமது எதிர்காலத்தை கேள்வி குறியாக்கியுள்ளனர்.

பளை பிரதேசத்தில் உள்ள வேம்போடுகேணி கிராமத்தை சூழவுள்ள நான்கு கிராமங்களிலும் குறித்த சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் கனரக வாகனங்கள் இந்த வீதிகள் ஊடாக சென்று வீதிகள் முற்றாக பழுதடைந்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள் உட்பட நோயாளர்கள் என பலர் பாதிப்படைந்துள்ளனர் எனவும் குறித்த வீதியும் இயற்கை வளத்தையும் காப்பாற்ற வேண்டியது தமது கடமை எனவும் குறித்த அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.