
பட்டலந்தை அறிக்கை குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவில் ரணிலிடம் விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும் எனப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
முகத்துவாரம் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலின் பின்னர் பட்டலந்த அறிக்கை, மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றமையால் இவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கு உறுதி பூண்டுள்ளதாகவும், ரணில் விக்கிரமசிங்க, முன்னர் அரசியல் பாதுகாப்பைப் பெற்ற அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறினார்