நாளை முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட பேருந்து சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் பயணிகளின் தேவையின் அடிப்படையில் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், புத்தாண்டு காலத்தில் விசேட தொடருந்து சேவைகளையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இந்த விசேட தொடருந்து சேவைகள் அமுல்படுத்தப்படும் என தொடருந்து பொது முகாமையாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு கோட்டை மற்றும் மருதானையில் இருந்து காலி, மாத்தறை, பெலியத்த, கண்டி, ஹட்டன் மற்றும் பதுளைக்கு விசேட தொடருந்து சேவைகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.