‘நாயே’ என விளித்தமையினால் கொட்டக்கலை நகரில் பதற்றம்
சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த மக்களை, ‘நாயே’ என விளித்து – திட்டி, வர்த்தக நிலைய உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை கொட்டகலை நகரில் பதிவானது.
நாட்டில் எரிபொருளுக்கும், சமையல் எரிவாயுவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றைப்பெறுவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை மக்களுக்கும், சாரதிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. கொட்டகலை பகுதியிலும் இந்நிலைமை காணப்படுகின்றது.
கொட்டகலை நகரிலுள்ள இரு வர்த்தக நிலையங்கள் ஊடாகவே சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி அதிக விலைக்கு லிற்றோ எரிவாயு விநியோகித்த வர்த்தக ஒருவரின் அனுமதி பத்திரத்தை லிற்றோ நிறுவனம் இடைநிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் மற்றைய வர்த்தக நிலையத்திலுள்ள உரிமையாளர் வாடிக்கையாளர்களை மதித்து நடப்பதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்துக்கு இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ளன. எனினும், சுமார் 50 பேருக்கு மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளது. ஏனைய சிலிண்டர்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன. இதனால் சிலர் வீடுகளுக்கு திரும்பினர். சிலர், இதனை எதிர்த்து போராடினர்.
ஏன் இவ்வாறு செயற்படுகின்றீர்கள் என வினவியபோதே, வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், வாடிக்கையாளர்களை நாயே என விளித்துள்ளார். இதனால் கடுப்பாகி வாடிக்கையாளர்கள் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் விஷ்வநாதன் புஷ்பாவும், திம்புள்ள பத்தனை பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நிலைமையை சுமுக நிலைக்கு கொண்டு வந்தனர். சம்பந்தப்பட்ட உரிமையாளர் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரினார். அதன்பிறகு, சில வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.