நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்களும் குறைந்தபட்சம் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்

ரஷ்யாவின் பிறப்பு விகிதம் கடந்த 1991-ஆம் ஆண்டில் இருந்து வெகுவாக குறைந்து வருவதோடு, முன்பு ஒவ்வொரு குடும்பத்திலும் 4 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர், ஆனால் தற்போதைய நவீன உலகில் அந்த அளவு சுருங்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலக ரஷ்ய மக்கள் பேரவை கூட்டத்தில், காணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

“ரஷ்யாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எனவே தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக நாட்டின் மக்கள் தொகையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு ஆகும்.

எனவே இனிவரும் காலங்களில் ரஷ்யாவில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதன்மூலம் நாட்டின் 1,000 ஆண்டு கால பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும்.” என வலியுறுத்தயுள்ளார்.

இந்நிலையில், யுக்ரைனுடனான போரில் இதுவரை சுமார் 3 லட்சம் ரஷ்யர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த பின்னணியில்தான் புடின் இவ்வாறு முடிவு எடுத்திருப்பதாக அங்குள்ள வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான கணக்கெடுப்பின்படி ரஷ்யாவின் மக்கள் தொகை 14 கோடியாக இருந்தது.

அது 1999 இல் புடின் முதல்முறையாக அதிபர் பதவியை ஏற்கும் முன்பு இருந்த மக்கள்தொகையை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது