நாட்டிற்கு ஆசி வேண்டி மன்னாரில் இடம் பெற்ற சர்வமத பிரார்த்தனை

-மன்னார் நிருபர்-

‘தந்தையே எமது தேசத்தை விழித்தெழச் செய்வீர்’ என்னும் கருப்பொருளில் மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அமைதிப் பவனியும் தேச விழிப்புணர்வுக்கான சர்வமத வழி பாடும் மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவோம், எங்கள் பிஞ்சுகளின் எதிர் காலத்தினை வளப்படுத்துவோம், எமது நாட்டை இருளிலிருந்து மீட்டெடுப்போம், விழிம்பு நிலையிலுள்ள மக்களை பாதுகாப்போம், என்னும் சுலோகங்களை தாங்கிய மக்கள் குறித்த நிகழ்வில் பங்கெடுத்தனர்.

தற்காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை மற்றும் இயல்பு நிலை பாதிப்புகளால் துன்பப்படும் மக்களின் துயரில் நாங்களும் இணைந்து எமது நாட்டுக்காக ஒருமித்து பிராத்திக்கும் முகமாக குறித்த நிகழ்வு கறிற்ராஸ் வாழ்வுதயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் போது தேச விழிப்புணர்வு சுடரினை சர்வமத மதத்தலைவர்களும் இணைந்து ஏற்றி வைத்தனர்.

கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து மத வழிபாடுகள் இடம்பெற்றன.அனைத்து மதத்தவர்களும் ஒன்று சேர்த்து நாட்டில் உள்ள இயற்கை வளங்களை இறைவனுக்கு காணிக்கையாக்கி மிகவும் அர்த்தம் உள்ளதான பொது வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் நீர், மண், உப்பு, தேங்காய், நெல் போன்ற பொருட்களை மையப்படுத்தி இவ்வழிபாடு இடம்பெற்றதுடன் தொடர்ந்து சர்வ மத பிரார்த்தனைகள் இடம்பெற்றது.