நாடு இவ்வளவு சீரழியும் வரை அமைச்சர்கள் தம் மனைவிமாருடன் சமையலறையில் இருந்தார்களா?

-கல்முனை நிருபர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் சுற்றாடல் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டதாக அறிகிறேன்.

தோல்வியடைந்த அரசில் பதவிகள் பொறுப்பெடுப்பதானது துரோகத்தனமான கண்டனத்துக்குரிய செயற்பாடாக பார்க்கிறோம்.

எமது நாட்டின் மக்களும், இளைஞர்களும் காலிமுகத்திடலில் நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று பல நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தோல்வியின் விளிம்பில் இருக்கும் மொட்டுக்கு முட்டுக்கொடுப்பதானது சமூகத்திற்கு செய்யும் பலத்த அநீதியாகும், என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

கல்முனையில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தல் காலங்களில் மொட்டை கடுமையாக சாடி மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் மிக மோசமான 20க்கு ஆதரவளித்து ஜனாதிபதியை சர்வாதிகாரியாக மாற்றி மிகப்பெரும் அநியாயத்தை செய்திருந்தனர்.

இவர்களினால் இலங்கை முஸ்லிம் சமூகம் தலைகுனிந்திருந்தது. மக்களின் நலனையேஇ நாட்டின் எதிர்காலத்தையே பற்றி சிந்திக்காமல் இன்று ஹாபீஸ் நஸீர் அமைச்சர் பதவியை ஏற்று அதனை விட பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த அரசே மக்கள் வேண்டாம் என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படியான செயலை செய்திருக்கும் ஹாபீஸ் நஸீருடன் கடந்தகாலங்களில் மாகாண சபையில் ஒன்றிணைந்து பணியாற்றியமையை எண்ணி வெட்கப்படுகிறேன்.

இவர்கள் தங்களை என்ன கூறி நியாயப்படுத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாரில்லை. சமூகத்திற்கு இவர்கள் செய்த பாவத்தை எங்கு சென்று கழுவப்போகிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.

கட்சி தலைவரினதும், கட்சி உயர்பீடத்தினதும் தீர்மானத்தை மீறி செயற்பட்டுள்ளார். இதை பாரிய நம்பிக்கை துரோகமாகவே பார்க்க வேண்டியுள்ளது. 20ஐ இல்லாதொழித்து 19ஐ கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதியே கருத்துக்களை வெளியிட்டுவரும் இந்த காலத்தில் அந்த ஜனாதிபதியிடம் சென்று அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவியை பெற்றிருப்பது மக்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்றுள்ளது.

இவரின் செயற்பாடு எல்லோருக்கும் கவலையளிக்கும் விடயமாக அமைந்துள்ளது.

ஊழலை ஒழிக்கும் கட்டமைப்பாடு எங்கள் எல்லோருக்கும் இருந்து கொண்டிருக்கிறது. இவர்களினால் நாட்டின் அரசியலில் தலைதூக்கியுள்ள ஊழலை ஒழிக்க முடியுமா? ஊழலின் காரணமாக தூய அரசியலை செய்யமுடியாத துர்பாக்கிய நிலை இலங்கையில் தோன்றியுள்ளது.

உள்ளுராட்சி மன்றம் முதல் பாராளுமன்றம் வரை நாட்டின் இறைமையை சீரழிக்கும் கரையான் போன்ற இந்த ஊழல் இல்லாதொழிக்கப்பட வேண்டும். நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் மிதமிஞ்சிய ஊழல்களே.

கடந்த அரசுகளில் கொஞ்சம் கொஞ்சமாக இருந்த ஊழல்கள் இந்த அரசில் மிதமிஞ்சி இருக்கிறது.

நாடு இவ்வளவு சீரழியும் வரை அமைச்சர்கள் மனைவிமாருடன் சமையலறையில் அமர்ந்து சமைத்து கொண்டா இருந்தார்கள்? என்று கேட்கவேண்டியுள்ளது.

கொரோனா காலத்தில் 05 டொலருக்கு வாங்கவேண்டிய தடுப்பூசிகளை 15 டொலர்களுக்கு வாங்கிய இந்த அரசு தகவல்களை அழித்து பாரிய மோசடிகளை செய்தது.

அதற்கு உடந்தையாக இருந்து அந்த காரியங்களை முன்னெடுத்ததுடன், டாக்டர் ஷாபி விடயத்திலும் இனவாதமாக மனிதாபிமானமின்றி செயற்பட்ட பேராசிரியர் சன்ன ஜயசுமண இந்த அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.

அவர் கடந்த காலங்களில் பல ஊழல்களுக்கு துணையாக நின்றவர். அரசியலில் பண அரசியல் கலாச்சாரத்தை தோற்றுவித்த ஹாபீஸ் நஸீர் போன்ற நிறைய ஊழல்வாதிகள் இந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களின் ஊழல்களுக்கு எதிராக காலிமுகத்திடலில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தும் உத்வேகத்துடன் இடம்பெற வேண்டும், என்று மேலும் தெரிவித்தார்.