தமிழர் தாயகத்தில் சுதந்திரம் இல்லை: கிளிநொச்சி சம்பவம் வெளிக்காட்டியுள்ளது

-யாழ் நிருபர்-

ஆயுதமின்றி தமது உரிமைகளுக்காக போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தமிழர்கள் மீதான அடக்குமுறையை சிறிலங்காவின் சுதந்திர தின நாளிலும் தோலுரித்து காட்டுகிறது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இடம்பெற்ற சுதந்திர தினத்திற்கெதிரான கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்டு பல்கலைக்கழக மாணவர்களின் விடுவிப்பு தொடர்பாக பொலிஸ் நிலையம் சென்று அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்கள் இவ்வாறான போராட்டங்களின் மூலம் தான் இழந்தவற்றை பெறமுடியும் என பலருக்கும் தெரியும். இங்கு ஆயிரம் இரண்டாயிரம் பேர் இருந்திருந்தால் பரவாயில்லை. என்னை பொறுத்தவரை வீசப்பட்ட புகைக்குண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பெண்கள் மாணவர்களை இன்று தாக்கியது. இது எல்லாம் ஒரு வேண்டப்படாத செயல் அவர்கள் அவ்வாறு செய்திருக்க கூடாது. அவர்கள் செய்ததன் மூலம் உண்மையிலே பெரும்பான்மைக்குரிய சுதந்திர தினத்திலே அவர்கள் தங்களுக்கு தாங்களே கறையை ஏற்படுத்தி விட்டார்கள்.

இது உலகளாவியரீதியில் போகின்ற பொழுது ஜனநாயக ரீதியில் அதுவும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயுதம் இல்லாமல் போராட முனைந்தவர்களை இவ்வாறு கையாண்ட விதம் அரசினை சர்வதேச மட்டத்தில் அவர்களின் அடக்குமுறையை எடுத்து காட்டும். தற்பொழுது இது தொடர்பில் அனைவரும் அறிந்திருப்பார்கள்.

தென் பகுதியிலும் கண்ணீர் புகை அடிக்கின்றார்கள். ஆனால் பொது போக்குவரத்தில் சுமூகமான நிலையை ஏற்படுத்த அதனை கையாளுகின்றார்கள். ஆனால் இங்கே அவ்வாறு கிடையாது. வீதியின் ஒரு வழியே வந்தவர்கள் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டார்கள் . தமிழர் மீது விரோத மனநிலையை கொண்டிருப்போர், கையிலிருக்கும் ஆயுதத்தை பயன்படுத்த முனைவார்களே தவிர கதைத்து பேச முன்வர மாட்டார்கள்.

தமிழர் தாயகத்தில் எமக்கு சுதந்திரம் இல்லை என்பதை இன்றைய நாளும் ஒரு சான்றாகும் இன்று தமது செயல்களால் இந்த போராட்டத்தினை உலகறிய செய்துவிட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.