டிக்டொக் வீடியோவிற்கு தலிபான்கள் தடை
ஆப்கான் இளைஞர்களை வழிதவறச் செய்வதாகக் கூறி வீடியோ பகிர்வு செயலியான டிக்டொக் மற்றும் பப்ஜி வீடியோ விளையாட்டை தலிபான்கள் தடை செய்துள்ளனர்.
ஒழுக்கமற்ற விடயங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேவைகளுக்கும் ஆப்கானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஏற்கனவே இசை, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அதிகாரத்திற்கு வந்த தலிபான்கள் மிதமான அணுகுமுறையில் ஆட்சி நடத்தப்போவதாக உறுதி அளித்தபோதும், குறிப்பாக பெண்களுக்கான உரிமைகள் பல குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இளம் சமூகம் தவறுதலாக வழிநடத்தப்படுவதை தவிர்ப்பதற்கே தற்போதைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தலிபான் பேச்சாளர் இனாமுல்லா சமன்கானி குறிப்பிட்டுள்ளார். தலிபான்களால் செயலி ஒன்று தடை செய்யப்படுவது இது முதல் முறையாகும்.
ஆப்கானில் இணையதள பயன்பாடு அண்மைய ஆண்டுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு தற்போது சுமார் ஒன்பது மில்லியன் பயனர்கள் உள்ளனர்.