ஞானசார விவகாரம் மே மாதத்திற்கு ஒத்திவைப்பு

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு அடிப்படை உரிமை மனுக்களையும் மே 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம், நேற்று திங்கட்கிழமை  தீர்மானித்தது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தற்போதைய ஜனாதிபதியின் செயலாளருக்கு பிரதிவாதியாக சேர்க்கப்படுவதற்கான நோட்டீஸ் கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதால் வழக்கை ஒத்திவைப்பதே நல்லது என்று சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மன்றுக்கு அறிவித்தார்.

எவ்வாறாயினும், தாங்கள் ஏற்கெனவே நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்த அவர்கள், இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இதன்படி, புவனேகா அலுவிஹாரே, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த இரண்டு மனுக்களையும் மே 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்தது.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பாக ​​ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் போது, ​​நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கடிதம் கிடைத்ததையடுத்து 2019ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி ஞானசார தேரர் வெலிக்கடை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாகவும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அமைந்துள்ளதாக மாற்றுக் கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.