சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து வீடு திரும்பிய 29 பேர் நிர்க்கதி

நாட்டில் திடீரென பிறக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதற்கமைய, நேற்று சனிக்கிழமை சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சுமார் 29 பேர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறித்த யாத்திரியர்கள் நேற்று மாலை 4.00 மணிக்கு மலையிலிருந்து இறங்கியதாகவும் அதனை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதனால் செல்வதற்கு பொது போக்குவரத்து இல்லாததன் காரணமாக தற்போது ஹட்டன் ரயில் நிலைய  ஓய்வு விடுதியில் தங்கியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளனர்.

கடைகள் மூடப்பட்டுள்ளதால் நேற்று இரவு, இன்று காலை உணவின்றி இருந்தாகவும் அதனை தொடர்ந்து ரயில்  நிலையத்தின் பணியாளர்கள் இன்று பகல் உணவை  வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன்  ரயில் நிலைய சிற்றூண்டிசாலையையும்  இவர்களின் நலன் கருதி திறந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த 29 பேரும்  பாணந்துறை, கொழும்பு, கம்பஹா, மாத்தறை உள்ளிட்ட வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்குகள் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகையிரத நிலை பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.