சாய்ந்தமருதில் இயங்கியது சட்டவிரோத மதரஸா : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திடம் கோரிக்கை

-கல்முனை நிருபர்-

அண்மையில் குர்ஆன் மனனம் செய்யும் மாணவன் மர்மமான முறையில் மரணித்த சம்பவத்தோடு தொடர்புடைய மதரஸத்து ஷபீலித் ரஷாத் என்ற மதரஸா முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் ஒரு குர்ஆன் மதரஸாவாக (MRCA/QM/AM/303) பதிவு செய்யப்பட்டுள்ளது.

குர்ஆன் மதரஸாவாக பதிவு செய்யப்படும் ஒரு நிறுவனம் முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்தின் சுற்றறிக்கைகளுக்கு அமைய ஒரு ஹிப்லு மதரஸாவாக செயல்பட முடியாது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில்  தெரிவித்துள்ளார்.

மேலும் , குர்ஆன் மதரசாக்கள் மாணவர்கள் தங்கி இருந்து படிப்பதற்கான விடுதி வசதியை வழங்க முடியாது என்பதோடு ஹிஃப்ளூ மதரஸாக்கள், அரபிக் கல்லூரிகள் மாத்திரமே மாணவர்கள் தங்கியிருந்து படிப்பதற்கான வசதிகளை வழங்க முடியும்.குர்ஆன் மதரஸாவாகப் பதிவுசெய்யப்பட்ட மதரஸத்து ஷபீலித் ரஸாத், ஹிஃபுளூ மதரஸாவாகச் செயல்பட்டது ஒழுங்கு விதிகளுக்கும், திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு முரணானது ஆகும்.

முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் விதிமுறைகளின்படி மதரசத்து ஷபீலித் ரஸாத்தின் சொத்துக்கள் வக்ஃப் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மதரஸாவின் நிலம் மற்றும் வளாகம் வக்ஃப் செய்யபடாமல் தனி நபருக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டுகள்களும் இன்று எழுந்துள்ளது.

மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில், இந்த மதராசாவின் செயல்பாடுகள் குறித்து உடனடி விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறும் விசாரணை முடியும் வரை அதன்குறித்த மதரஸாவின் பதிவை இடைநிறுத்தி வைக்க நீதிக்கான மய்யம் கலாச்சார திணைக்களத்திடம் கோரிக்கை விடுப்பதோடு திணைக்களத்தின் விதிமுறைகளை வெளிப்படையாக மீறியதற்காக மதரசத்து ஷபீலித் ரஸாத்தின் நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறது என தெரிவித்துள்ளார்.