சாணக்கியன் பாராளுமன்றத்துக்கு தலைமை தாங்கும் அருகதையற்றவர் – முஷாரப் முறைப்பாடு

-கல்முனை நிருபர்-

பாராளுமன்றத்துக்கு தலைமை தாங்குகின்ற தகுதி, அருகதை ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இழந்து விட்டார், என்று குற்றம் சாட்டி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எஸ். எம். எம். முஷாரப் நேற்று வியாழக்கிழமை எழுத்துமூல முறைப்பாடு மேற்கொண்டார்.

இவர் இம்முறைப்பாட்டை சபாநாயகரிடம் நேரில் கையளித்தார்.

முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளவை வருமாறு,

சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்றத்துக்கு தலைமை தாங்குகின்ற ஒரு உறுப்பினராகவும் இருந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளை மீறி நடந்து உள்ளார்.

இவரின் நடவடிக்கை ஒழுக்க விழுமியங்களுக்கு புறம்பானது மாத்திரம் அல்ல பாராளுமன்றத்தின் சம்பிரதாயத்துக்கும் மாறானது ஆகும்.

சக பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறிஉள்ளது. கடந்த 05 ஆம் திகதி நான் பாராளுமன்றத்தில் உரையாற்றி கொண்டிருந்தபோது அவர் குறுக்கிட்டு இடையூறுகள் ஏற்படுத்தினார்.

மாத்திரம் அல்ல 5000 ரூபாய் பணத்தை எனக்கு அன்பளிப்பு செய்ய முயன்று நான் பணத்துக்கு விலை போகின்றவன் என்று காண்பித்து எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் நடந்தார்.

இந்நிகழ்வு முழுமையாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. உள்நாட்டையும், வெளிநாடுகளையும் சேர்ந்த பல மில்லியன் பார்வையாளர்கள் இதை பார்வையிட்டு உள்ளனர்.

நாடு மிக பாரிய நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கின்ற நிலைமையிலும், இந்நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற உறுபினர்களின் அபிப்பிராயங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கொண்டிருந்த நிலையிலும் இது நடந்து உள்ளது.

சாணக்கியன் இராசமாணிக்கம் எம். பி முறை தவறி நடப்பது ஒன்றும் இது முதல் தடவை அல்ல. ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற அமர்வில் சக கௌரவ உறுப்பினர்களை மிருகம் என்று விளித்திருந்தார். அது பாராளுமன்ற வரலாற்றிலேயே பாராளுமன்ற பாரம்பரியத்துக்கு முற்றிலும் முரணாக அமைந்து இருந்தது.

இவரின் முறைகேடான் நடத்தை எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதுடன் எனக்கும், எனது பதவி மற்றும் அந்தஸ்து ஆகியவற்றுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகின்றேன், இதனால் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன்.