சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் : புகைப்படத்தின் உண்மை நிலை?
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற செய்திகள் தொற்று நோய் போன்று மிக வேகமாக பரவி வருகின்றது.
அதன்படி, கிளிநொச்சி-அக்கராயன் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் மேஜையின் மீது கால்களை வைத்தபடி கடமையாற்றும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படத்தை பகிர்ந்து வைத்தியரின் இச்செயற்பாடு தொடர்பாக பலரும் பலவாறு தமது கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறித்த புகைப்படத்தின் உண்மை நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
குறித்த புகைப்படத்தில் இருக்கும் வைத்தியர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கால்களை அகற்ற வேண்டிய நிலையில் உள்ளார். அதற்காக தற்போது மாற்று வைத்தியம் மேற்கொண்டுள்ளார்.
கால்களை கீழே நிலத்தில் வைக்க முடியாத நிலையில் அவர் இருப்பதால் தமது அனுமதியின் கீழ் அவர் கால்களை மேஜையில் வைத்துள்ளார்
அதுமட்டுமன்றி, குறித்த வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையில் இருக்கின்றனர்.
இந்நிலையில், ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் குறித்த வைத்தியர் நோயாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்தும் கடமையாற்றுகிறார் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், வைத்தியசாலையின் அனுமதியின்றி இவ்வாறான புகைப்படத்தை எடுத்தமை தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.