சங்கானை கூட்டுறவு சங்கம் இலஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்-

சங்கானை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் இலஞ்சம் பெறுவதாக அந்த சங்கத்தின் அங்கத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் வடக்கு, மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், யாழ். மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அங்கத்தவர்கள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்களாக நீண்ட காலமாக உள்ளோம்.

எமது தொழிலை நேர்த்தியாக செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் எமக்கான அனுமதிப்பத்திரங்கள் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றது.

இந்த அனுமதிப்பத்திரங்கள் அந்தந்த பகுதி ப.தெ.வ.அ கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் ஊடாகவே அங்கத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த அனுமதிப்பத்திரங்களை எமக்கு வழங்கும் போது கடந்த காலங்களில் சங்கத்தால் 250 ரூபா எம்மிடமிருந்து கையூட்டாக பெறப்பட்டது.

இந்த ஆண்டு ஒவ்வொரு அங்கத்தவர்களிடமிருந்தும் 400 ரூபா இவ்வாறு பெறப்பட்ட பின்னரே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

அனுமதிப்பத்திரங்களானது எமக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு சென்று அங்கு நாங்கள் வழங்கும் பணத்திற்கு பற்றுச்சீட்டு கேட்டபொழுது பற்றுச்சீட்டு தர முடியாது என்று அவர்கள் மறுக்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் எமது பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு எமக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்றனர்.

இது தொடர்பான தகவலைப் பெறுவதற்கு, சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கத்தின் பொது முகாமையாளர் செ.சுரேஷ்குமாருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அவரிடம் இது தொடர்பாக தொலைபேசியில் வினவ முயன்றபோது கேள்வியை முழுமையாக கேட்பதற்கு அனுமதிக்காமல் ‘மதுவரி திணைக்களம்தான் அனுமதிப்பத்திரம் வழங்குகின்றது.

இது தொடர்பாக என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருடன் பேசுங்கள்.

உங்களுக்கு தகவல் தேவை என்றால் எழுத்து மூலமாக என்னிடம் கோருங்கள்’ எனக்கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார்.

மீண்டும் அவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவேளை மறுமுனையில் பதில் எதுவும் கிடைக்கவில்லை.