கோறளைப்பற்று நாசிவன் தீவு கிராமத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம்
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட நாசிவன் தீவு கிராமத்தில் வளர்பிறை சனசமுக நிலையத்தின் ஏற்பாட்டில் சமூக பங்கேற்புடனான திண்மக்கழிவு முகாமைத்துவதிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
வாழைச்சேனை வேல்ட் விஷன் நிறுவனத்தின் நிதி உதவியுடன் கோறளைப்பற்று பிரதேச சபையின் மேற்பார்வையின் கீழ் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இத் திட்டத்தின் ஓர் அங்கமாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வும் கழிவுகளை தரம் பிரித்து சேகரிப்பதற்கான பைகள் வழங்கும் நிகழ்வும் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச சபையின் செயலாளர் ச.நவநீதன் சனசமூக நிலையத்தின் செயலாளர் ந.சுதர்சன் மற்றும் வேல்ட்விக்ஷன் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் சனசமூக நிலைய உறுப்பினர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடன் இடம்பெற்றது
இதன் பிரதான வளவாளராக கோறளைப்பற்று பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல்லாஹ் ஹாரூன் ஆகியோர்கள் கலந்துகொண்டு இத்திட்டத்தின் நோக்கம் கழிவுகளை எவ்வாறு தரம் பிரித்தல் கழிவுகளின் வகைகள் அன்றாட வாழ்வில் கழிவுகளை எவ்வாறு குறைத்தல் பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனையை குறைத்து அதற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துதல் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் இப்பிரதேசத்தின் டெங்கு நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாத்தல் பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் கழிவுகளை முறையாக தரம் பிரித்தல் போன்ற செயற்பாட்டின் விளைவுகள் எதிர்பார்க்கப்படுவதாக தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தமது உரையின் போது தெரிவித்தார்.