‘கோட்டா வீடு செல்லும் வரை நாங்களும் வீடு செல்லப்போவதில்லை’

‘கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி வீடு செல்லும் வரை நாங்களும் வீடு செல்லப்போவதில்லை’ என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியை பதவி விலகக்கோரியும் அரசுக்கு எதிராகவும் காலிமுகத்திடலில் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

மேலும், இன்றிரவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை உணவுகளை தயாரிப்பதற்கும் சிலர் காலிமுகத்திடலில் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.