கிளிநொச்சியில் ஆரம்ப பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு அங்கீகாரம்

-யாழ் நிருபர்-

கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் வாழுகின்ற சிறார்களின் நன்மை கருதி, அப்பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது

அதனடிப்படையில், அனைத்து மதங்களையும் சேர்ந்த சுமார் 800 மாணவர்கள் ஆரம்ப கல்வியை கற்கக்கூடிய வகையில் ‘நாவலர் ஆரம்ப பாடசாலை’ உருவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக கிளிநொச்சி மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டன..

இந்நிலையில் வடக்கு மாகாணத்திற்கு தேவையான கோழித் தீவனங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், வடக்கு மாகாணத்திற்கு தேவையான கோழித் தீவனங்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடன் திட்டத்தின் ஊடாக அவற்றைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே வடக்கு மாகாணத்திற்குத் தேவையான மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் வகையில், அதிகாரிகளினால் அடையாளப்படுத்தப்பட்ட விபரங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படடுள்ளதாகவும் இன்னும் சில மாதங்களில் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடுமெனவும் இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.