கர்ப்பிணி மனைவியை 10 முறை துப்பாக்கியால் சுட்ட கணவர்
அமெரிக்காவில் தனது மனைவியுடன் ஏற்பட்ட வாய்தர்க்கத்தினால் துப்பாக்கியால் சுட்ட கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கேரளா கோட்டயத்தைச் சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது ஸ்ரீ- 32) என்பவரே அமல் ரெஜியான கணவனால் சுடப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பிலிருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய 3 வயது மகன் டேவிட் கேரளாவில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் இருந்த நிலையில், மகனையும் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். இதில், மீண்டும் மீரா கர்ப்பமானார். அவர், அங்கேயே சகோதரியுடன் சேர்ந்து செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற தினத்தில் தனது கணவர் அமல் ரெஜியுடன் மீரா காரில் சென் வேளை காரில் வைத்தே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர். பின்னர் ஆத்திரத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து 10 முறை மீராவை அமல் ரெஜி சுட்டு விட்டு சிறிது தூரம் சென்றதும் அங்கிருந்த தேவாலய பார்க்கிங் பகுதியில் தனது காரை நிறுத்தினார்.
அப்போது, அங்குள்ளவர்களிடம் மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாகவும், இது பற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டுமெனவும் கூறியுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார், மீராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அமல் ரெஜியை பொலிஸார் கைது செய்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீராவின் குழந்தை வயிற்றிலேயே இறந்தது.